பிரதமர் மோடி பாணியை கையில் எடுத்த விஜய் ’சர்கார்’...சேத்துபட்டில் துணியை வைத்து தவெக அரசு செய்த காரியம்...!
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பகுதிகளை துணியால் மறைத்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பார்வையில் படாமல் இருக்க, ஏழை மக்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குடிசைகள் துணிகள் மற்றும் தற்காலிக சுவர்கள் மூலம் மறைக்கப்படும் சம்பவங்கள், அவ்வப்போது சர்ச்சையக் கிளப்பி வருகின்றன.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகையின் போது குடிசைப் பகுதிகள் பெரிய துணிகள் மற்றும் செங்கல் சுவர்கள் மூலம் மறைக்கப்பட்டன.
டெல்லியில் ஜி-20 மாநாட்டின்போது பிரமுகர்களின் வாகனங்கள் செல்லும் வழியிலிருந்த ஏழை மக்களின் குடிசை வீடுகளும், நடைபாதையில் குடியிருப்போரின் டெண்ட்களும் பச்சை நிற துணிகள் மற்றும் பெரிய பேனர்களால் மறைக்கப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக, 2023ம் ஆண்டு சி.எஸ்.எம்.டி (CSMT) பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகள் மோடியின் வருகையையொட்டி வெள்ளை துணிகளால் மறைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தெறிக்கப்போகும் 'ஜனநாயகன்' திருவிழா..!! திருப்பூரில் வெறிகொண்டு தயாராகும் பிரத்தியேக டி-ஷர்ட்..!!
தற்போது தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலும் இந்த பாணி கொண்டு வரப்பட்டுவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை சேத்துப்பட்டியில் அமைந்துள்ள பயோ-சிஎன்ஜி (Bio-CNG) இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை முதலமைச்சர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த இயற்கை எரிவாயு உற்பத்தி மையம், சேத்துப்பட்டி கெங்குரெட்டி சுரங்கப்பாதை (Subway) அருகே அமைந்துள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, அந்த உற்பத்தி மையத்திற்கு எதிரே உள்ள சில பகுதிகள் துணியால் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, அந்தப் பகுதியில் கீழ்தளத்தில் அம்மா உணவகமும், மேல்தளத்தில் மாநகராட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, அந்த இடிந்த பகுதி துணியால் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றிய பொருட்கள் அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை இருந்த பகுதியும் துணியால் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதலமைச்சர் செல்லும் வழியில் உள்ள நடைபாதையின் சில பகுதிகளும் தற்காலிகமாக துணியால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை மறைக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். ஆனால், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு இன்று காலை முழுவதும் நடைபாதையில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
"முதலமைச்சர் வருகைக்காக மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிரந்தரமாக செய்து தரப்பட வேண்டும். குப்பைகள் அகற்றப்பட வேண்டும். அம்மா உணவகத்தின் இடிந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட வேண்டும்" என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சுகர் மாத்திரைக்கு ‘நோ’... விஜய்யை விமர்சித்த மார்க்கண்டேயனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்...!