இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!
இந்திய எல்லையில் உலகிலேயே மிகப்பெரிய அணையை கட்டுவதற்கான பணிகளை சீனா துவங்கியுள்ளது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்திய எல்லையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் பணிகளை சீனா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தொடர் எதிர்ப்புகளையும் மீறி சீனா இந்த பிரமாண்ட திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார்லங் சாங்போ நதியின் நீர்ப்பாசனப் பகுதியில் சீனா கட்டவிருக்கும் இந்த அணை, உலகிலேயே மிகப் பெரிய அளவிலானது எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்குள் சியாங் என்ற பெயரில் நுழையும் இந்த நதி, பின்னர் பிரம்மபுத்திராவாக மாறி வங்கதேசம் வழியாக கடலில் கலக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால், பிரம்மபுத்திரா நதியின் நீர் ஓட்டம் பெருமளவில் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விவசாயத்துக்கு தேவையான நீர் குறைவு, வெள்ள அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!
இந்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது. சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இந்த திட்டத்துக்கு இந்தியா தனது எதிர்ப்பை பலமுறை தெரிவித்துள்ள நிலையில், சீனா இப்போது பணிகளைத் தொடங்கியிருப்பது இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்த அணை திட்டம் சீனாவின் உள்நாட்டு மின் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களின் ஒரு பகுதியாகும். ஆனால், எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு பாதுகாப்பு மற்றும் நீர் பங்கீடு சார்ந்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய-சீன உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...!