×
 

மலேரியா தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 71 பேர் பாதிப்பு… 7 வயது சிறுமி உயிரிழப்பு! ஆந்திராவில் அதிர்ச்சி

மொத்தம் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 29 பேர் தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேர் உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஆந்திரா-தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள கிராமத்தில் மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் போலவரம் பகுதியில் உள்ள கொல்லகுப்பா கிராமத்தில் 71 பேருக்கு மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் அவர்களில் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 29 பேர் தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேர் உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், 2-ம் வகுப்பு படித்து வந்த மாதிவி ஜமுனா என்ற 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி! போலீஸ் விசாரணையில் பகீர்!

சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் இருந்து 9 பேர் கொண்ட நிபுணர் குழுவும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. விஜயவாடா, ராஜமகேந்திரவரம் மற்றும் காக்கிநாடாவில் இருந்து மேலும் மருத்துவக் குழுக்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளன.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை, வழங்கப்படும் சிகிச்சை மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்துள்ளார்.

மாத்திரை உட்கொண்ட 71 பேரில் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதும், சிறுமி உயிரிழந்ததும் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவ அதிகாரிகளின் விசாரணை முடிவுகள் இந்த சம்பவத்துக்கான காரணத்தை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக முதலீட்டாளர்களுக்கு ஆந்திரா குறி! சென்னை, கோவையில் சந்திப்பு நிகழ்ச்சி! தமிழகம் தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share