இந்திய டீனேஜர்களில் 5 பேரில் ஒருவருக்கு போதைப்பழக்கம்?! தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருத்தம்!
அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி, மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கவலை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், போதைப்பொருள் பிரச்சினையை பொது சுகாதார விவகாரமாக மட்டும் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாக அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாக்கும் முயற்சிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக போதைப்பொருட்களை கடத்தி, இளம் வயதினரை இந்த வலையில் சிக்க வைத்து சுரண்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அதே நேரத்தில், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை குற்றவாளிகளாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறினார். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி, மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கட்சி பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி - மம்தா வழக்கில் முக்கிய உத்தரவு!!
குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க குடும்பம், பள்ளிகள் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சூர்யகாந்த் தெரிவித்தார். குழந்தைகள் தங்கள் சிறு வயதிலேயே கல்வி, விளையாட்டு மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு ஒரு வழக்கை விசாரித்தபோது, இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது தீவிரமான பொது சுகாதார சவாலாக மாறி வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதுடன், அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிகிச்சை வழங்குவதும் முக்கியம் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்துகள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!