அகமதாபாத்: சீனியரை குத்திக்கொன்ற ஜூனியர்.. தனியார் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!!
அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனை 8ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோக்ரா பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த பயங்கரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்தியதில், பாதிக்கப்பட்ட மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் சிறிய தகராறைத் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
கத்திக்குத்து காயங்களுடன் மாணவர் மணிநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குற்றவாளியாகக் கருதப்படும் 8-ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மோதலுக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பு... இளைஞர் கார் ஏற்றி கொலை! காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் வெறிச்செயல்…
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பள்ளியை அடித்து உடைத்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இந்த சம்பவத்தால் பள்ளி வளாகம் சேதப்படுத்தப்பட்டதாகவும், பள்ளி முதல்வர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பள்ளிகளில் மாணவர்களிடையே வன்முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் பள்ளிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது. காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்கள்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!