×
 

மீள முடியாத வேதனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... முதல் ஆளாக ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி...!

ஏ.வி.எம். சரவணின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸின் தலைவருமான ஏ.வி.எம்.சரவணன், வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை தனது 86வது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தைச் சார்ந்த திரைப்பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அவரது உடலானது இன்று பிற்பகல் 3.30 மணி வரை சென்னையில் உள்ள 3வது மாடியில் அமைந்துள்ளது ஏவிஎம் ஸ்டுடியோவில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் காலை முதலே இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஏ.வி.எம். சரவணின் மறைவுச் செய்தி குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: மழையால் சேதமடைந்த பயிர்கள்..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

மேலும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு… pic.twitter.com/pzB90zbDYU

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 4, 2025

யார் இந்த ஏவிஎம் சரவணன்?

1939 ஆம் ஆண்டு பிறந்த எம். சரவணன், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார். 1950களின் பிற்பகுதியில் தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து ஏவிஎம் புரொடெக்‌ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டுடியோவை நடத்தி வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோஸ், தொழில்துறையில் எண்ணற்ற சூப்பர் ஸ்டார்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கியுள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தனது தந்தையால் நிறுவப்பட்ட ஸ்டுடியோவின் மரபு மற்றும் நெறிமுறைகளை அவரது வழியிலேயே பழமை மாறாமலும், அதே சமயம் புதுமைக்கு ஏற்றபடியும் வழி நடத்தி வந்தார். 

நானும் ஒரு பெண் (1963), சம்சாரம் அது மின்சாரம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி: தி பாஸ் (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்புகள் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திரையுலக ரசிகர்களிடையே மரியாதையையும் பாராட்டையும் பெற்றுள்ளன. 

சினிமாவிற்கு அப்பால் ஒரு மிகப்பெரிய ஆளுமையாகவும் ஏவிஎம் சரவணன் விளக்கியுள்ளார். ஏ.வி.எம். சரவணன் 1986 ஆம் ஆண்டு மெட்ராஸின் ஷெரிப்பாக பணியாற்றியுள்ளார். ஏ.வி.எம். சரவணன் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர். தமிழக அரசின்  “கலைமாமணி”, புதுவை அரசின் “பண்பின் சிகரம்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளை ஏ.வி.எம்.சரவணன் மகன் எம்.எஸ்.குகன் நிர்வகித்து வருகிறார். இவருடன் ஏவிஎம் சரவணனின் பேத்திகளும், குகனின் மகன்களுமான அருணா குகனும், அபர்ணா குகனும் தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: 'மக்கள் மாளிகை': பெயர் மாற்றம் வேண்டாம்.. சிந்தனை மாற்றமே தேவை..!! CM ஸ்டாலின் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share