ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை எதிர்க்கிறேன்.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்..!!
நாட்டை சர்வாதிகாரத்தின் பிடியில் தள்ளும் நோக்கத்தில் மத்திய அரசு ஜனநாயகத்தின் அடித்தளங்களை தகர்க்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 20) மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்தார், இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவற்றில் முதன்மையானது அரசியலமைப்பு (130-வது திருத்த) மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா 2025, மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2025 ஆகும். இந்த மசோதாக்களில், குறிப்பாக பிரதமர், முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்களது பதவி பறிக்கப்படும் என்ற விதிமுறையை உள்ளடக்கிய மசோதா மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. இது 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொருந்தும்.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இந்த மசோதாவை அரசியலமைப்புக்கு எதிரானது என விமர்சித்து, மசோதாவின் நகல்களை கிழித்து அமித்ஷா முன்பாக வீசினர், இதனால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையும் படிங்க: இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
எதிர்க்கட்சிகள் இந்த மசோதா அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகவும், ஆளும் கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த அமித்ஷா, மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படும் என அறிவித்தார், இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு தங்கள் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த மசோதாக்கள், குறிப்பாக பதவி நீக்க மசோதா, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகமாக கருதினாலும், அமித்ஷா இதனை சட்ட ஒழுங்கை பலப்படுத்தும் முயற்சியாக நியாயப்படுத்தினார். இந்த மசோதாக்களின் எதிர்காலம் கூட்டுக்குழு ஆய்வு மற்றும் நாடாளுமன்ற விவாதங்களைப் பொறுத்து அமையும்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ஜனநாயகத்தின் ஆணிவேரையே தாக்கி, இந்தியாவை சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க மசோதா முயற்சிக்கிறது. நாட்டை சர்வாதிகாரத்தின் பிடியில் தள்ளும் நோக்கத்தில் மத்திய அரசு ஜனநாயகத்தின் அடித்தளங்களை தகர்க்கிறது. வாக்கு திருட்டு அம்பலமாகியுள்ள நிலையில் பாஜக அரசு அமர்ந்து இருப்பதே கேள்விக்குறியாகிவிட்டது. மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு சட்டபூர்வமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அம்பலமான வாக்கு திருட்டு மோசடிகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.
அரசியலமைப்புக்கு விரோதமான இந்த மசோதாவை நீதிமன்றங்கள் நிச்சயமாக நிராகரிக்கும். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல், விசாரணை இல்லை, தண்டனை இல்லை என்பது பாஜகவின் உத்தரவு. இது சீர்திருத்தம் இல்லை. கருப்பு மசோதா. கருப்பு நாள். ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். வாக்குகளை திருடுதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செப்.-ல் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா..?