சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியம்; மத்திய அரசை சாடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் இப்போது தணிக்கை வாரியத்தையும் பாஜக தனது கைக்கூலியாக மாற்றியுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையைப் போலவே, தற்போது தணிக்கை வாரியமும் மத்திய பாஜக அரசின் ஒரு புதிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் காலதாமதம் மற்றும் சட்டச் சிக்கல்கள் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் ஒரு சார்பாக இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் நேரடியாக மத்திய அரசைச் சாடியுள்ளார்.
“சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜனவரி 9) வெளியாக வேண்டிய நிலையில், தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது. இந்த விவகாரத்தில், தணிக்கைக் குழுவின் ஒரே ஒரு உறுப்பினரின் புகாரால் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான படம் முடங்கிப் போயிருப்பதைச் சுட்டிக்காட்டியே முதல்வர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: "சிபிஐ வளையத்தில் தவெக நிர்வாகிகள்!" – கரூர் வழக்கில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!
ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்கச் சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்துத் தணிக்கை வாரியம் அவசரமாக மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் காரணமாகப் படம் பொங்கலுக்குக் கூட வெளியாகாத சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களும் சென்சார் போர்டு என்பது ‘ஆர்டிகல் 19’ வழங்கும் பேச்சுரிமையை நசுக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் இந்தக் கண்டனப் பதிவு, ‘ஜனநாயகன்’ விவகாரத்தை ஒரு தேசிய அளவிலான அரசியல் விவாதமாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!