தலைவரா போன அதே இடத்திற்கு இப்போ CM-ஆக..!! பக்கா பிளானுடன் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..!!
தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை கேட்டுப்பெறுவது தொடர்பாக பட்டியல் தயாரிப்பது குறித்த ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், விரைவில் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த முக்கிய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ம் தேதிகளில் டெல்லி சென்றிருந்தார் விஜய். அப்போது ஒரு கட்சித் தலைவராகச் சென்ற அவர், இப்போது முதலமைச்சராக அதே நகருக்கு மீண்டும் செல்லவிருக்கிறார்.
பிரதமர் மோடியைச் சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதமரின் தொடர் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் காரணமாக இன்னும் சந்திப்பு நேரம் ஒதுக்கப்படவில்லை. நேரம் கிடைத்தவுடன் பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த டெல்லி பயணம் வெறும் அரசியல் சந்திப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது. தமிழகத்தின் பொருளாதாரத் தேவைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான மாஸ்டர் பிளானுடன் முதலமைச்சர் செல்ல உள்ளார்.
இதையும் படிங்க: "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு வாழ்த்து!
கடந்த வாரம் நிதித் துறை உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திமுக ஆட்சியில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியின் தீவிரம் விஜய்க்கு புரிய வந்தது. மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணி நிதி உதவிகளைப் பெறுவதே சிறந்த வழி என்று அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர். இதற்கு முதலமைச்சர் விஜய், “மத்திய அரசை முழுமையாகச் சார்ந்திருக்காமல் மாற்று வழிகள் ஏதாவது உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள், “2026-27 பட்ஜெட் தயாரிப்பு நடைபெறும் நிலையில் குறுகிய காலத்தில் புதிய நிதி திரட்டல் சாத்தியமில்லை. எனவே மத்திய அரசிடமிருந்து உரிய நிதிகளைப் பெறுவதே உடனடித் தீர்வு” என்று விளக்கினர்.
இதை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், பிரதமரிடம் தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் விரிவான பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், ராகுல் காந்தியுடன் தொலைபேசி மூலம் பேசி டெல்லி வருகை குறித்து விஜய் தகவல் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளுடன் உரையாடலும், மத்திய அரசுடன் நிதி-திட்டப் பேச்சுவார்த்தையும் இணைந்த இந்தப் பயணம், புதிய அரசின் முதல் முக்கிய வெளியுறவு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!