கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு? - கோவை, நெல்லை, கன்னியாகுமரி போத்தீஸ் கடைகளிலும் ஐ.டி. ரெய்டு...!
சென்னையில் மட்டுமின்றி கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளிக்கடைகளிலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜிஎன்செட்டி சாலையில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் வீட்டில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் குழு என இரு மகன்கள் வீட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் 7:20 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் சோதனை:
கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறை திடீர் ரெய்டு...!
பிரபல துணிக்கடையான போத்தீஸ் நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை , மதுரை, நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் துணிக்கடைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கோவையில் கிராஸ்கட் வீதியிலும், ஒப்பணக்கார வீதியிலும் துணிக்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாமல் மோசடியில் ஈடுபடுவதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கோவையில் உள்ள இரண்டு போத்தீஸ் துணி கடைகளிலும், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 மணி முதல் அதிரடி:
நெல்லை டவுன் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாலை 6 மணிக்கு வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 10க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி.. 10 இடங்களில் ஐ.டி. ரெய்டு.. வெளியானது பரபரப்பு தகவல்...!