×
 

எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

வணிக எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.993 உயர்ந்துள்ளதால், அது சிறு, குறு வணிகர்களின் கைகளுக்கு எட்டாப் பொருளாகிவிட்டது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சாக்காகக் காட்டி மத்திய அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனால் சிறு உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கட்சி எச்சரித்துள்ளது.

கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்பட்டு இந்தியாவும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், கடந்த மூன்று மாதங்களாக மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக மே 1 முதல் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு ரூ.3,237 ஆகியுள்ளது. இந்த அதிரடி உயர்வால் ஆயிரக்கணக்கான உணவகங்கள், தேநீர் கடைகள், பலகாரக் கடைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு வணிகர்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடரும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு..!! ஓட்டல்களில் எகிறும் உணவு விலை..!! தவிக்கும் சாமானிய மக்கள்..!!

வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ள நிலையில், சிலிண்டர் பெறும் இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒருமுறையும், நகரப் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேநீர் முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

“மக்கள் நலனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறும் பிரதமர் மோடி அரசு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பது வெட்கக்கேடானது. இது இந்தியாவின் பாரம்பரிய அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது” என்று அவர் விமர்சித்தார். மேலும், வெளிநாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் பெரும் நிறுவனங்களுக்கு கலால் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு மக்களுக்கான சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சிபிஐ குற்றம்சாட்டியது.

இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிபிஐ தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சமையல் செலவை அதிகரித்துள்ளதுடன், உணவு தொழில் துறையையும் பாதித்துள்ளது. பல மாநிலங்களில் சிறு வியாபாரிகள் போராட்டத்துக்கு தயாராகி வரும் நிலையில், மத்திய அரசு இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இதையும் படிங்க: சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share