SIR விவகாரம் விஸ்வரூபம்! ஞானேஷ் குமாரை குறிவைக்கும் காங்கிரஸ்! கார்கே கூட்டிய அவசர கூட்டம்!
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடவடிக்கையைச் சுற்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக வெளியான செய்தியில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புகளை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. SIR நடவடிக்கை, வாக்காளர் பெயர்களை சேர்ப்பது மற்றும் நீக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் இதில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?
இந்த சூழலில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் SIR தொடர்பான விவகாரம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஞானேஷ் குமார் மீது அடுத்தகட்டமாக எத்தகைய அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் தனது தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் முழு தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளே என்றும், உள்நாட்டில் வேறுபட்ட கருத்துகள் தெரிவிப்பது எந்த நிறுவனத்திலும் நடைபெறும் வழக்கமான ஆலோசனை நடைமுறையின் ஒரு பகுதி என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனால் SIR விவகாரம் தொடர்பான அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு ஞானேஷ் குமார் விவகாரத்தில் கட்சி எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க தீர்மானம்? எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!!