39 தொகுதி வேணும்!! திமுகவிடம் அடம் பிடிக்கும் காங்., ஐவர் குழு! தேர்தல் கணக்கு!
திமுக கூட்டணியில் 39 சட்டசபை தொகுதிகளை கேட்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இம்முறை பெரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்டு வாங்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடம் அமைத்த 5 பேர் கொண்ட குழு பங்கேற்றது. இக்குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றனர். இக்கூட்டத்தில், திமுகவிடம் 39 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்பது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
அடிப்படையாக, ஒரு லோக்சபா தொகுதி அல்லது ஒரு வருவாய் மாவட்டத்துக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் 39 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. கடந்த தேர்தலில் கிடைத்த 25 தொகுதிகளைவிட அதிகமாகவும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்தும் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: 45 தொகுதிகள் வேணும்!! எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் பாஜக!! கையை பிசையும் இபிஎஸ்!
ஏற்கனவே 125 தொகுதிகளை “வெற்றி வாய்ப்பு உள்ளது” என்று காங்கிரஸ் அடையாளம் கண்டு பட்டியல் தயார் செய்துள்ளது. அதிலிருந்து 39 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து திமுகவிடம் கேட்க முடிவாகியுள்ளது.
முக்கியமாக, ஆட்சியில் பங்கு கேட்டு வந்த காங்கிரஸ், இம்முறை அதை கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அதிக தொகுதிகளைப் பெறுவதிலேயே குறியாக உள்ளது. “திமுகவிடம் 39 கேட்டால் குறைந்தது 30 தொகுதிகளாவது கிடைக்கும்” என்று காங்கிரஸ் நிர்வாகிகள் நம்புகின்றனர்.
ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை என்பதால், குறைந்தது 35 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. திமுக 25 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்தால், அதற்குப் பதிலாக ஒரு ராஜ்யசபா சீட்டைக் கேட்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிறப்பு தீவிர சுருக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தம், பூத் கமிட்டி நியமனம் ஆகியவற்றைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட தனிக் குழுவையும் காங்கிரஸ் அமைத்துள்ளது. இதில் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கே.விஜயன், ராம்மோகன், பி.ஆர்.நாயுடு, விக்டர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் தொடர்வது உறுதியான நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவோ? தவெகவோ? நமக்கு 125 சீட்டு கன்பார்ம்!! தொகுதிகள் எவை எவை? காங்கிரஸில் தேர்தல் பணிகள் ஜரூர்!