×
 

சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

சர்வதேச மகளிர் தினமான இன்று, மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினமான இன்று, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ₹60 உயர்த்தி மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் வரிச் சுமைகளால் தத்தளிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த ₹60 உயர்வு பெரும் இடியாக இறங்கியுள்ளது. இது உணவுப் பொருட்களின் விலையைப் பல மடங்கு உயர்த்தும் சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனப் பேசி வந்த பாஜக அரசு, இப்போது அநியாயமாக விலையை உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசு, இப்போது மக்களின் சுமையைக் கூட்டுகிறது.

இதையும் படிங்க: "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்வெறியைக் கண்டிக்க இந்தியப் பிரதமர் மோடி முன்வரவில்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க டிரம்ப் அனுமதி அளித்ததைச் சாதனையாகப் பேசுவது, இந்தியாவின் இறையாண்மைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பாகும். இவர்களுக்கு நாட்டு மக்களை விட அமெரிக்கா மீதே விசுவாசம் அதிகம் எனப் பெ. சண்முகம் சாடியுள்ளார்.

சர்வதேச முதலாளிகள் எடுக்கும் முடிவுகளை இந்திய உழைப்பாளி மக்கள் மீது சுமத்தும் கார்ப்பரேட் ஆதரவுப் பாதையை மோடி அரசு தீவிரப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த எரிவாயு விலை உயர்வு இத்துடன் நிற்கப்போவதில்லை, பெட்ரோலியம் சார்ந்த அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தும். எனவே, போருக்கு எதிராகவும், விலை உயர்வுக்கு எதிராகவும் மக்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனச் செயலாளர் பெ. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகளிர் தினத்தில் பெண்களுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அதே நாளில் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share