8-வது நாளாக சென்னையில் வலுக்கும் போராட்டம்! நீதி கேட்ட ஆசிரியர்கள்.. நீளும் வழக்குகள் காவல்துறை அதிரடி!
சம வேலைக்குச் சம ஊதியம் கோரிச் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 1,180 பேர் மீது எழும்பூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று 8-ஆவது நாளாக எழும்பூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக உள்ள சாலையில் அமர்ந்து ஆசிரியர்கள் பெரும் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீது ஒரே நேரத்தில் வழக்குப் பாய்ந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கக் காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஆசிரியர் சங்கங்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எழும்பூர் பகுதியில் நேற்று 8-ஆவது நாளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தபோதும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாக நின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி எழும்பூர் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடுதல் (Unlawful Assembly), பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் சென்னை மாநகரக் காவல் சட்டம் (Madras City Police Act) ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,180 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் இருந்த பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் இந்த வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "வாக்குறுதி என்னாச்சு?" கொளுத்தும் வெயில்.. நடுரோட்டில் போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!
ஏற்கனவே போராட்டத்தின் போது ஆசிரியர் ஒருவருக்குக் கை எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது போராட்டத்தைத் திசைமாற்றியுள்ளது. “தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவது ஜனநாயகத்திற்கு அழகல்ல” எனப் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!