4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் 4 நாள் பயணமாக இந்தியா வருகை. பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று, சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவுடன் இன்று 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்துள்ளார். சைப்ரஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் இதுவாகும். தற்போது சைப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியக் குழுமத்தின் (EU Council) தலைமைப் பொறுப்பை வகித்து வருவதால், இந்த இந்தியப் பயணம் சர்வதேச ராஜதந்திர அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லிக்கு வந்திறங்கிய சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் முறைப்படி உற்சாகமாக வரவேற்றனர். இந்த 4 நாள் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் நிகோஸ் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான உயர்மட்ட ஆலோசனைகளை நடத்த உள்ளார். கடந்த 2025 ஜூன் மாதம் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டிற்கு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே உருவான உத்திசார் கூட்டாண்மையின் அடுத்தகட்ட நகர்வாக இந்தச் சந்திப்பு அமையவுள்ளது.
இந்த மெகா சந்திப்பின் போது, இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையே பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச வர்த்தகம், தொழில்நுட்ப முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு (AI), கல்வி மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாக உள்ளன. டெல்லி நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதிபர் நிகோஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்க உள்ளதோடு, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்குச் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட ‘இந்தியா - சைப்ரஸ்’ தொழில் அதிபர்கள் மாநாட்டிலும் (Business Forum) பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!
இதையும் படிங்க: மருத்துவ கனவுடன் இன்று களம் காணும் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்!