டார்ஜிலிங்கில் நிலச்சரிவு... இதுவரை 14 உயிர்கள் பறிபோன சோகம்... மீட்பு பணிகள் தீவிரம்...!
டார்ஜிலிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மெரிக் மற்றும் சுக்கியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைகளின் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டார்ஜிலிங் சென்றுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள், சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தீவிர மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழையைத் தொடர்ந்து டீஸ்டா நதியின் நீர்மட்டம் அதிகரித்ததால் சிலிகுரியிலிருந்து சிக்கிம் வரையிலான NH 10 முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு வருத்தமளிப்பதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வெற்றி பெற பிராத்திப்பதாகவும் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.
டார்ஜிலிங் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜி, வடக்கு வங்க மாவட்ட மாவட்ட அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். வடக்கு வங்காளத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளை காவல்துறை வெளியேற்றும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், மாநில தலைமையகம் மற்றும் மாவட்டங்களில் 24×7 கட்டுப்பாட்டு அரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், + 91 33 2214 3526 மற்றும் +91 33 2253 5185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் + 91 86979 81070 மற்றும் 1070 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு யாருடன் போராடும்? கொஞ்சம் சொல்லுங்க... ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி...!