நொடிக்கு நொடி பதற்றம்..! மக்களின் உள்கட்டமைப்பே குறி.. பாக். முகத்திரையை கிழித்த இந்தியா..!
பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை சிதைப்பது தான் பாகிஸ்தானின் நோக்கம் என இந்தியா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிகாரிகள், பாகிஸ்தான் மே 10 அன்று ஜம்முவில் உள்ள சம்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து தனது விரோத போக்கை தொடர்ந்தது. இந்திய ஆயுதப்படைகள் விழிப்புடன் உள்ளன. மேலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உறுதி கொண்டுள்ளன. இரவு முழுவதும் பல ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் அனுப்பி பொதுமக்கள் மற்றும் மதத்தலங்களுக்கு ஆபத்தை விளைவித்தன.
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனை, பள்ளிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இன்று அதிகாலை பஞ்சாப் விமானப்படைத்தளத்தையும் அதிவேக ஏவுகணைகளை கொண்டு தாக்க முயன்றது. வடக்கே பாரமுல்லாவில் இருந்து தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை சிதைப்பது தான் பாகிஸ்தானின் நோக்கம்.
இந்திய ராணுவ உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் குறி வைக்கிறது. பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தனது வான் பரப்பை தவறாக பயன்படுத்துகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கனரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சியால் கோட்டில் உள்ள ராணுவ தளம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் அனைத்து போலி கதைகளையும் தவிர்த்து வருகிறது இந்தியா. லாகூரில் இருந்து வரும் பொதுமக்கள் விமானங்களுக்கு பின்னால் பாகிஸ்தான் இன்னும் ஒளிந்து கொள்கிறது. இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்தன. இவ்வாறு கூறினர்.
அப்போது பேசிய, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தொடர் தாக்குதலுக்கு தரப்படும் பதிலடி குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது; பாகிஸ்தான் அரசு தங்கள் ஊடகங்கள் மூலமாக இந்தியாவில் பலத்த பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றனர். சூரத் விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறுவது தவறு. உதம்பூர் விமான நிலையம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறும் தகவல்கள் தவறு.
பாகிஸ்தான் ராணுவம் கூறும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்பாதீர்கள். இன்று காலை ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சீர்சா விமானப்படை தளம் தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது. எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவலும் தவறானது. இவ்வாறு அவர் பேசினார்.