×
 

டெல்லியில் கட்சியை உடைக்கும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரோதனை.!

டெல்லியில் 13 ஆம் ஆத்மி மாநகராட்சி கவுன்சிலர்கள், 'இந்திர பிரஸ்தா விகாஸ்' என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

டெல்லியில் 13 ஆம் ஆத்மி மாநகராட்சி கவுன்சிலர்கள், 'இந்திர பிரஸ்தா விகாஸ்' என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலின்போதே மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால், மாநகராட்சியில் ஆம் ஆத்மியின் பலம் குறைந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மேயர் தேர்தலை ஆம் ஆத்மி புறக்கணித்தது. டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளில் தற்போது, பாஜக - 117, ஆம் ஆத்மி - 100, காங்கிரஸ் - 8 என கவுன்சிலர்கள் உள்ளனர்.



இந்நிலையில் மாநகராட்சி ஆம் ஆத்மி தலைவராக இருந்த முகேஷ் கோயல் தலைமையில் அக்கட்சியின் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளனர். பின்னர் அவர் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "டெல்லி மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. உள்கட்சி பிரச்சினையே ஆம் ஆத்மியில் பிரதானமாக உள்ளது. ஒருவரை ஒருவர் பழிவாங்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வளர்ச்சிப் பணிகளுக்கு கவுன்சிலர்களுக்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. எனவேதான், 'இந்திர பிரஸ்தா விகாஸ்' என்கிற புதிய கட்சியைத் தொடங்க முடிவு எடுத்துள்ளோம். ஆம் ஆத்மியில் இருந்து பலர் விலகி இக்கட்சியில் இணைய உள்ளனர். எங்களுடைய இந்தக் கட்சி மாநகராட்சியில் மட்டுமே கவனம் செலுத்தும். மாநில அளவிலான அரசியலில் ஈடுபடும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை." என்று முகேஷ் கோயல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமே இதுதான்... அமைச்சர் மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

ஆனால், ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் இந்த முடிவின் பின்னணியில் ஆளும் பாஜவின் சதி உள்ளதாகவும் குதிரைபேர நடவடிக்கையாக கவுன்சிலர்களுக்கு தலா ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிதித்துறை மசோதாக்கள்.. ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ரவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share