×
 

Air Purifier-களுக்கும் GST-யா..?? 18% ஜிஎஸ்டி எதற்கு..?? மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம்..!!

டெல்லியில் காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க மத்திய அரசு தவறியுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தீவிரமடைந்து, மக்கள் சுவாசிப்பதற்கே திண்டாடும் நிலையில், காற்று சுத்திகரிப்பு கருவிகள் (ஏர் ப்யூரிஃபயர்கள்) மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை (GST) குறைக்க மத்திய அரசு தவறியுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"சுத்தமான காற்றை வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஏர் ப்யூரிஃபயர்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் கபில் மதன் தாக்கல் செய்த பொதுநல மனு (PIL) வழக்கை விசாரித்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தது. மேலும் நச்சுக்காற்றிலிருந்து அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாமல் குடிமக்கள் தவிக்க விடப்பட்டுள்ளதாக கண்டித்துள்ள நீதிமன்றம், விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தி சுத்திகரிப்பு கருவிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  

இதையும் படிங்க: “டெல்லி காற்று மாசு… ‘10 மாதத்துல சரி செய்ய முடியாது!’ – முன்னாள் அரசை குற்றம்சாட்டிய ஆளும் கட்சி”

இந்த மனுவில், காற்று சுத்திகரிப்பு கருவிகளை 'மருத்துவ உபகரணம்' என்று அறிவித்து, அதன் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசுபாடு 'அவசரகால நெருக்கடி'யாக உள்ள நிலையில், இந்தக் கருவிகளை சொகுசுப் பொருளாக கருத முடியாது என்று மனுதாரர் வாதிட்டார். நீதிமன்றம், மத்திய அரசின் வழக்கறிஞரை கண்டித்து, "ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதை வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். 15 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிக்கலாம். இதை அவசர நிலையாக கருதுங்கள்" என்று உத்தரவிட்டது.

மேலும், "ஒரு நாளைக்கு 21,000 முறை சுவாசிக்கிறோம். மாசுபாட்டால் ஏற்படும் தீமையை கணக்கிடுங்கள்" என்று கூறி, மாசுபாட்டின் தீவிரத்தை சுட்டிக்காட்டியது. அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்களைப் பெற்று, அதே நாள் பிற்பகல் 2:30 மணிக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. விடுமுறை காலத்திலும் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றுத் தர குறியீடு (AQI) அபாயகரமான அளவை எட்டியுள்ளது. PM2.5, PM10 போன்ற மாசுக்கள் சுவாச நோய்கள், நுரையீரல் பாதிப்பு, இதய நோய்களை ஏற்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சுகாதார அமைச்சகம், மோசமான AQI அளவுகளில் ஏர் ப்யூரிஃபயர்களை அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணமாக பரிந்துரைத்துள்ளன.

ஆனால், 18 சதவீத ஜிஎஸ்டி காரணமாக இவை பலருக்கும் எட்டாக்கனியாக உள்ளன. மனுதாரர், 2020 அரசு அறிவிப்பின்படி, இந்தக் கருவிகள் மருத்துவ உபகரண வரையறைக்குள் வருவதாகவும், ஜிஎஸ்டி விதிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் வாதிட்டார். இது அரசியல் சாசனத்தின் 21-ஆம் பிரிவின் கீழ் உயிர் வாழும் உரிமையை மீறுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, டெல்லியின் நீண்டகால காற்று மாசுபாடு பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அரசின் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏர் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) உள்ளிட்ட அமைப்புகளும் ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க கோரியுள்ளன. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூடி முடிவெடுக்கலாம். இது மக்களின் சுகாதார உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய படியாக இருக்கும். 
 

இதையும் படிங்க: அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த 'மெஸ்ஸி' முழக்கம்! - ஜாம்பவானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share