ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காவல் துறையின் தடையை மீறி அத்துமீறி நுழைந்து தேசியக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்திய வழக்கில் கைதான காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் போராட்டக்களமாக விளங்கி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியை அதிகாரப்பூர்வ போராட்டப் பகுதியிலிருந்து டெல்லி காவல் துறை சமீபத்தில் நீக்கியிருந்தது. அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் சிஜேபி அமைப்பினர் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 13 அன்று அதிகாலையில் காவல் துறையின் தடையுத்தரவுகள் மற்றும் தடுப்புகளை மீறி சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் உரிமைக் குரலாக ஒலிப்போம்... அமைச்சர் ராஜ்மோகன்..!
இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தடையை மீறி அத்துமீறி நுழைதல் (Trespassing) மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்களை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அக்டோபர் 14 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது நீதிமன்றக் காவல் காலம் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரு நிர்வாகிகளும் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இருவரின் நீதிமன்றக் காவலையும் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
ஜந்தர் மந்தரில் ஜனநாயக ரீதியில் தேசியக் கொடியை ஏந்திப் போராட்டம் நடத்தியதற்காக இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சிஜேபி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருவது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!