தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!
தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைச் சிதைக்கிறதா பாஜக? இடஒதுக்கீடு மசோதா குறித்துக் கிளம்பும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் கபில் சிபல்.
தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்குப் பின்னால் பாஜகவின் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி ஒளிந்திருப்பதாக மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கே விடப்பட்ட சவால் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2029 மக்களவைத் தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெறுவதற்காக பாஜக தீட்டியுள்ள அரசியல் தந்திரம்தான் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா. உண்மையிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே 33% இடஒதுக்கீட்டை வழங்கலாமே? அதை ஏன் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு செய்ய வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களின் மக்களவை இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. இதில் மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்: உத்தரப் பிரதேசத்தில் தற்போதுள்ள 80 இடங்கள் 120 ஆக உயரும், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 இடங்கள் 59 ஆக மட்டுமே உயரும். இதனால் வடமாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் அதிகரித்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு முற்றிலுமாகச் குறையும்.
இதையும் படிங்க: பீகாரில் 21 ஆண்டுகால நிதிஷ் குமார் ஆட்சி முடிவு! பாஜகவின் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சர் நாளை பதவி ஏற்பு!
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை அதிகரிப்பது என்பது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் செயலாகும். இதன் மூலம் வடமாநிலங்களில் மட்டும் அதிக இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தென்னிந்திய மக்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என கபில் சிபல் சாடியுள்ளார்.
தேர்தல் ஆணையம் (CEC) மற்றும் தொகுதி மறுவரையறை ஆணையம் போன்றவற்றில் தங்களுக்குச் சாதகமானவர்களை நியமிப்பதன் மூலம், இந்தச் சூழ்ச்சியை பாஜக வெற்றிகரமாகச் செயல்படுத்தத் துடிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவின் இந்த மெகா சூழ்ச்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற குரல் தற்போது வலுத்து வருகிறது. தொகுதி மறுவரையறை என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை மட்டுமல்ல, அது இந்தியாவின் ஜனநாயக அதிகாரப் பகிர்வையே மாற்றியமைக்கக் கூடியது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!