பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!
சிலிண்டர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இனிமேல் ஓட்டல்களில் அனைத்து உணவு பொருட்களையும் தயாரித்து வழங்க முடியும்.
அமெரிக்கா–ஈரான் இடையேயான போர் பதற்றத்தின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்தியாவிலும் எரிபொருள் கிடைப்பதில் நெருக்கடி உருவானது. இதன் தாக்கம் வணிக சமையல் எரிவாயு விலையிலும் பிரதிபலித்து, உணவகத் தொழிலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது.
வணிக சிலிண்டர் விலை திடீரென அதிகரித்ததுடன், சில காலம் கடும் தட்டுப்பாடும் நிலவியது. அரசு நிறுவனங்கள் மூலம் போதுமான அளவில் சிலிண்டர்கள் கிடைக்காததால், பல உணவகங்கள் தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் எரிபொருள் செலவு மட்டுமின்றி, உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவும் கணிசமாக உயர்ந்தது.
இந்த கூடுதல் செலவுகளை சமாளிக்க, டீ, காபி உள்ளிட்ட பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதேபோல் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பொங்கல், வடை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் விலையும் சுமார் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. சில உணவகங்கள் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட சில உணவுகளை தற்காலிகமாக தயாரிப்பதையும் நிறுத்தின.
இதையும் படிங்க: இனி 9 இல்ல 4 தான்..!! மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்..!!
இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை குறைந்திருந்தாலும், வணிக சிலிண்டர் விலையில் இதுவரை எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை. இதனால் உணவக உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பு கூறுகையில், போருக்கு முன்பு ரூ.2,000-க்கும் குறைவாக இருந்த வணிக சிலிண்டர் தற்போது ரூ.3,500 வரை உயர்ந்துள்ளதாகவும், தற்போது தட்டுப்பாடு நீங்கி சிலிண்டர்கள் தாராளமாக கிடைத்தாலும், விலை குறைக்கப்படாததால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்கும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு மாதங்களாக ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக அரசு நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் பல நிரந்தர வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். தற்போது விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், தடையற்ற சேவையை உறுதி செய்து பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்ப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!