ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது..!! கறார் காட்டும் மத்திய அரசு..!!
இந்த தடை 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், மறுஉத்தரவு மூலம் இத்தடை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக சந்தை விலைக்குக் குறைவாக விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலை, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிச் செல்வதால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், உற்பத்திச் செலவைவிடக் குறைந்த விலையில் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்து வருகின்றன. இதனால் சாதாரண மக்களுக்கு விலை குறைவாகக் கிடைக்கிறது. ஆனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய கம்பெனிகளின் தேவைக்கு மொத்த விற்பனை நிலையங்களில் அதிக விலையில் (சந்தை விலை) வழங்கப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில் சில்லறை நிலையங்களில் டீசல் ஒரு லிட்டர் ரூ.95.20க்கு கிடைக்கும் நிலையில், மொத்த விற்பனையில் ரூ.134.50க்கு விற்கப்படுகிறது.
இருப்பினும், சில வணிக நிறுவனங்கள் இந்த விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி சில்லறை நிலையங்களில் இருந்து மொத்தமாக எரிபொருள் வாங்கிச் செல்வதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!
90 நாட்கள் தடை விதிப்பு: புதிய உத்தரவின்படி, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து மொத்த அளவில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் தேவையை மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து பூர்த்தி செய்துகொள்ளலாம். இந்தத் தடை மறு உத்தரவு மூலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், ஒரு வாகனத்தின் எரிபொருள் டேங்கில் ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் நிரப்பக் கூடாது என்ற உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்கிய எரிபொருளை மறுவிற்பனை செய்வது அல்லது வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்: இந்த உத்தரவை மீறுபவர்கள் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். இருப்பினும், தகுதியான நுகர்வோருக்கு மத்திய அரசு தேவைப்பட்டால் விலக்கு அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த நடவடிக்கை சாதாரண மக்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது. இந்த உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் பாக்கெட்டுக்கு மீண்டும் அடிதான்! எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்..!