இந்தாங்க தீபாவளி போனஸ்.. என்ஜாய்..!! ரயில்வே ஊழியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்..!!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு நல்ல செய்தி! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (பிஎல்பி) வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு சுமார் 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,865.68 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (செப்டம்பர் 24) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு சமம். ஒவ்வொரு தகுதியான ஊழியருக்கும் அதிகபட்சம் ரூ.17,951 வரை கிடைக்கும்" என்றார். மேலும் இந்த போனஸ் துர்கா பூஜா/தசரா பண்டிகைக்கு முன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2030 முன்மொழிவு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
இந்திய ரயில்வேயின் சாதனைகளை கருத்தில் கொண்டு இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருடாந்திர கேபெக்ஸ் (மூலதன விரிவாக்கம்) முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, செயல்பாட்டு திறன் அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற காரணிகள் இதற்கு உதவியுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் போனஸ் கணக்கிடல் ஆறாவது ஊதிய ஆணையத்தின் குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் (ரூ.7,000) செய்யப்படுகிறது, என்றாலும் ஏழாவது ஊதிய ஆணையத்தின் படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பொறுத்து ரயில்வே ஊழியர் யூனியன்கள், போனஸ் கணக்கீட்டை புதுப்பிக்க வேண்டும் என கோரியுள்ளன.
இந்த போனஸ் யார் யாருக்கு பொருந்தும்?
டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், ட்ரெயின் மேனேஜர்கள் (கார்டுகள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், டெக்னீஷியன்கள், டெக்னீஷியன் உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மென்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட குரூப் 'சி' ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவர். ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்பிஎஸ்எஃப்) ஊழியர்கள் இதில் அடங்கவில்லை.
ரயில்வே ஊழியர் ஃபெடரேஷன் (ஐஆர்இஎஃப்) தலைவர் சர்வஜீத் சிங் கூறுகையில், "இது ஊழியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம். ஆனால் போனஸ் கணக்கீட்டை ஏழாவது ஊதிய ஆணையத்துடன் ஒத்திசைவுபடுத்த வேண்டும்" என்றார். இந்த போனஸ் அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு மிகுந்த குஷியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அரசின் இந்த முடிவு ஊழியர் நலன் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2030 முன்மொழிவு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!