×
 

யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!

ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் என்பதே தேமுதிகவின் டிமாண்ட்டாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்ட நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மட்டும் இன்னும் இறுதி முடிவை வெளியிடாமல் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு மேஜர் கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், கூட்டணியை உறுதி செய்யும் முடிவை தொகுதி பங்கீடு எண்ணிக்கை இறுதியாக முடிவான பின்னரே அறிவிப்பதாக பிடிவாதமாக உள்ளார். இதனால் இரு தரப்பிலிருந்தும் "முதலில் கூட்டணியை உறுதி செய்யுங்கள், பின்னர் தொகுதி பேச்சு" என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தேமுதிகவின் முக்கிய கோரிக்கை ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் இரட்டை இலக்க தொகுதிகள் (double-digit seats) என்பதாக உள்ளது. அதிமுக தரப்பில் இதற்கு ஒத்துப்போகும் வகையில் ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் இரட்டை இலக்க தொகுதிகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக தரப்பில் 8 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இந்த வேறுபாடு காரணமாக பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: இலவம் காத்த கிளி தேமுதிக!!! 21 தொகுதி ஒரு எம்.பி சீட்டு!! பிரேமலதா போட்டு வைத்த அரசியல் கணக்கு!

கடந்த ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் பெருந்திரளான தொண்டர்கள் கலந்துகொண்டதால், பேரம் பேசும் நிலையை பலப்படுத்த பிரேமலதா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் விட்டுவிட்டார். இதனால் தேமுதிக தரப்பில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி தொடர்கிறது.

அதிமுக தரப்பில் கூட்டணியை உறுதி செய்ய அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பிரேமலதாவின் பதில் "தொகுதி பங்கீடு முடிவானால் மட்டுமே கூட்டணி உறுதி" என்பதால் அதிமுக தற்போது சைலண்ட் மோடுக்கு சென்றுள்ளது. திமுக தரப்பிலும் இதேபோல் கப்சிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதும், தொகுதி எண்ணிக்கை காரணமாக தேமுதிக அதிமுக-பாஜக கூட்டணியுடன் சென்றது. அப்போது பிரதமர் மோடி கூட்டத்தில் விஜயகாந்த் படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது தேமுதிக. இந்த அனுபவம் காரணமாக தற்போது தாமதமாக்கி பேரம் பேசுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், சமீபத்தில் தேமுதிக நிர்வாகி ஒருவர் துரைமுருகனுடன் பேச சென்ற சம்பவம் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக இறுதி முடிவு எப்போது வரும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தாமதம் தேமுதிகவின் வாக்கு வங்கியை பாதிக்குமா அல்லது அதிக தொகுதிகளை பெற உதவுமா என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிங்க: தேமுதிக பக்கா ப்ளான்!! கூட்டணி அறிவிக்காததன் அசத்தல் பின்னணி! யாருக்கு கல்தா?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share