என்ன பகல் கனவா? எந்தக் கொம்பன் நினைச்சாலும் திமுகவை அசைக்க முடியாது... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...!
எந்தக் கொம்பன் நினைத்தாலும் திமுகவை அழிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர் சிறப்பு தீவிர பணிகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஏராளமானோரின் வாக்குரிமை பறிக்கப்படும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை திமுகவினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது நெருக்கடி நிலையை போன்றது என்றும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டனர் என்றும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். திமுகவை யாராலும் எந்த காலத்திலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்றும் கூறினார். ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள் திமுகவினர் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!
நெருக்கடி காலத்தில் திமுக தலைவர்கள் முதல் தொண்டர் வரை நெருக்கடிக்கு ஆளானார்கள் என்றும் தெரிவித்தார். திமுகவை அழித்து விடலாம் என பலர் பகல் கனவு காண்பதாகவும் கூறினார். ஹரியானா, கர்நாடகாவில் நடந்தது போல தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை நாம் அனுமதிக்க கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!