தவெக விஜயை சமாளிக்க மு.க.ஸ்டாலின் புது வியூகம்! திமுகவில் இனி 10 துணை பொதுச்செயலாளர்கள்! அதிரடி ஆரம்பம்!
தி.மு.க.,வில் துணை பொதுச்செயலர்கள் எண்ணிக்கையை உயர்த்த, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மு டிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்த கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போது தி.மு.க.வில் கனிமொழி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் சிவா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி மற்றும் சாமிநாதன் ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர். கட்சியின் அமைப்பு கட்டமைப்பில் முக்கிய பொறுப்பாக கருதப்படும் இந்த பதவிகளில் சமூக சமநிலையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, சமீபத்திய தேர்தல் முடிவுகள் மற்றும் பல்வேறு சமூகங்களின் அரசியல் அணுகுமுறைகள் குறித்து நடத்தப்பட்ட உள்கட்சி ஆலோசனைகளில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகங்கள் மற்றும் சில முக்கிய சமூக பிரிவுகளின் ஆதரவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமை கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நிரந்தர எதிர்க்கட்சி திமுகவா.? பரபரக்கும் பனையூர்..! தவெகவுக்கு கூடும் மவுசு...!
இதன் அடிப்படையில், தற்போது ஏழாக உள்ள துணை பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுடன், நாடார், நாயுடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகளிடமும் இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய தலைமை அமைப்பை உருவாக்குவது முக்கியம் என்றும் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.
எனினும், இந்த மாற்றங்கள் குறித்து தி.மு.க. தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், துணை பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் கட்சிக்குள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!