ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!
மேகதாது விவகாரத்தில் திமுக தலைமையின் விமர்சனங்களுக்குத் தவெக தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மிகக் காட்டமான பதிலடியை வெளியிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட திமுக தலைமை, ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியிலும் வயிற்றெரிச்சலிலும் உளறி வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மேகதாது அணை கட்டும் விவகாரம் ஏதோ அண்மைக்காலத்தில் உருவானது போல திமுக பேசி வருவது, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தூங்கிக் கொண்டிருந்ததற்கான ஒப்புதல் வாக்குமூலம் அன்றி வேறில்லை எனத் தவெக தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சாடியுள்ளது.
இது தொடர்பாகத் தவெக தலைமை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், மக்கள் தீர்ப்பை ஏற்று யதார்த்தத்தை உணராமல், தாங்களே இன்னும் அதிகாரத்தில் இருப்பது போன்ற மாயையில் திமுக தலைமை செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!
திமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் நலனிலும் தமிழக உரிமைகளிலும் முனைப்புடன் செயல்பட்டிருந்தால், மக்கள் அவர்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றி முடக்கியிருக்க மாட்டார்கள் என்பதை அக்கட்சியின் தலைமை உணர வேண்டும் எனக் காட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பதவியை இழந்த பொறாமையிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திமுக முன்வைக்கும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளைத் தமிழக மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் மட்டுமின்றி, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த எந்தவொரு விவகாரத்திலும் தவெக அரசு சமரசமின்றி உறுதியாக நின்று உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும், தமிழக மக்களின் நலன்கள் பாதிக்கப்பட ஒருபோதும் தவெக அரசு இடம் தராது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!