முதல்வர் எங்கே..? 5 வாரத்தில் 4 லாக்அப் டெத்... தமிழக அரசை கண்டித்த திமுக..!!
5 வாரங்களில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக திமுக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ், அஜித்குமார், சபரிவர்மன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதற்குள் மேலும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெம்பாக்கம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான அருணாச்சலம். சட்டவிரோதமாக மது விற்றதாக 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸ் இளைஞர் அருணாச்சலத்தை ஜூலை 17ஆம் தேதி கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலத்தின் தலை, கால் பகுதிகளில் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து வாரங்களில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக திமுக விமர்சித்துள்ளது. பொறுப்புக்கூறலிலிருந்து ஓடி ஒளிவது மோசமான நிர்வாகத்தின் கொடூரமான யதார்த்தத்தை மறைத்துவிடாது என முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் இந்த மோசமான ஆட்சியில் மூன்று மாதங்களுக்குள்ளாகவே, தமிழ்நாடு காவல் நிலையங்கள் சித்திரவதைக்கூடங்களாக மாறிவிட்டன என்று தெரிவித்தது.
இதையும் படிங்க: மேகதாது பிரச்சனையில் நேருக்கு நேர்..! ஆகஸ்ட் 3-ல் விஜய் - டி.கே.எஸ் சந்திப்பு.!! காவிரியில் திருப்புமுனையா..?
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், எவ்விதத் தண்டனைக்கும் அஞ்சாத சூழலில் அவை செயல்படுகின்றன. காவலில் உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்காகக் குடும்பங்கள் துயருற்றிருக்கும் வேளையில், முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒரு அறிக்கை கூட இல்லை, துளியும் பொறுப்புக்கூறல் இல்லை., தேர்தல் காலங்களில் முழக்கமிடும் பேச்சுகள்.ஆனால் உண்மையான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும்போதோ அப்பட்டமான கோழைத்தனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!