×
 

அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்சோல் துணை மாவட்ட மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு பிளாஸ்டர் அல்லது முறையான மருத்துவக் கட்டுக்குப் பதிலாக மருந்து அட்டைப்பெட்டியை வைத்து கட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை வசதி குறித்து கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.

நவ்கோத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகேசுவாரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார் என்ற இளைஞர் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹர்சைன் பாலம் அருகே விபத்துக்குள்ளானார். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உள்ளூர் மக்களும் உறவினர்களும் அவரை உடனடியாக மஞ்சோல் துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள், எலும்பு முறிந்த பகுதியை அசையாமல் வைக்க மருந்துப் பெட்டியின் அட்டைத் துண்டுகளை இருபுறமும் வைத்து கயிறு மற்றும் பேண்டேஜ் மூலம் இறுக்கமாகக் கட்டினர். முதலுதவி அளித்த பிறகு, மேல் சிகிச்சைக்காக பெகுசராய் சதர் மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர். வீடியோவில் இளைஞர் மருத்துவமனை படுக்கையில் அட்டைப்பெட்டி கட்டப்பட்ட காலுடன் படுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் அபினவ் பிரியதர்ஷி இதைப் பற்றி பேசியுள்ளார். “எலும்பு முறிந்தால் அந்தப் பகுதியை அசையாமல் வைப்பது அவசியம். இது மருத்துவ அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்காலிக ஸ்ப்ளிண்ட் முறை. அப்போது எலும்பியல் மருத்துவர் அல்லது டிரஸர் பணியில் இல்லை; பிளாஸ்டர் வசதியும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். பெகுசராய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் வீடியோ குறித்து விசாரணை உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவசர முதலுதவியில் அட்டைப்பெட்டி பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாததை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பீகார் அரசின் சுகாதார அமைப்பு குறித்த பொதுமக்களின் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க: "மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடா?"... பிகார் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share