டெல்லிக்கு போடப்பட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்!! என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
டெல்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலமானது.
தலைநகர் டெல்லியின் இதயப் பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்தி வரும் தீவிர விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெடிப்பை நடத்தியவர் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மருத்துவர் டாக்டர் உமர் நபி என்பது முதல் கட்ட விசாரணையிலேயே தெரியவந்தது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை அவர் தானே ஓட்டி வந்து செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலுக்கு உதவியாக இருந்த மற்றொரு முக்கிய குற்றவாளியான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் காஸிகுந்த் பகுதியைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜசிர் பிலால் வானியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான் உண்மையான பயங்கரத் திட்டம் வெளியுலகுக்கு தெரியவந்தது. செங்கோட்டை குண்டுவெடிப்பு என்பது ஒரு தொடக்கம்தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது. டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை ஹமாஸ் அமைப்பு பயன்படுத்துவது போல ட்ரோன் மூலம் தாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்புக்கு துருக்கியில் ப்ளான்!! என்.ஐ.ஏ விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
இதற்காக சிறிய ரக ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் உயர்தர கேமராவும், நீண்ட நேரம் பறக்க வைக்கும் வகையிலான பேட்டரியும் பொருத்தப்பட்டிருந்தன. மிகச் சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களும், உலோகத் துகள்கள் கலந்த குண்டுகளும் ட்ரோன்களில் பொருத்தப்பட்டு நெரிசலான இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
இதே போன்ற ட்ரோன் தாக்குதல்களை சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல்-காசா எல்லைப் பகுதிகளில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதே மாதிரியான தாக்குதலை இந்தியத் தலைநகரில் நடத்த முயன்றது பெரும் ஆபத்து என்பதை என்ஐஏ அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்தச் சதித் திட்டத்தில் அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இன்னும் சில மருத்துவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை என்ஐஏ ஏற்கனவே கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தொழில்முறை மருத்துவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
என்ஐஏ-வின் விரைவான நடவடிக்கை மற்றும் உளவுத்துறை ஒருங்கிணைப்பு காரணமாக இந்தப் பயங்கர ட்ரோன் தாக்குதல் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது போன்ற திட்டங்களுக்கு பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் குறித்த விசாரணையை என்ஐஏ மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி வெடிப்புக்கு யார் காரணம்?! எப்படி வந்தது அவ்வளவு வெடிபொருள்?! நாளை பாதுகாப்பு குழு கூட்டம்?!