வீட்டுல நாய் வளர்க்குறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த அலர்ட்! சென்னை கார்ப்பரேஷன் கறார்
வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் முறையாக உணவு மற்றும் தண்ணீர் இருப்பிடம் உள்ளிட்டவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும் எனவும் பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னைக்கு மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரிய விட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நாய்கள் மற்றும் செல்ல பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...
மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்ல பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டு இருக்க கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் இதனை உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வோடு பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வளர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மின் தூக்கிகள் ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்கள் அச்சமூட்டும் வகையில் அசைவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நாய்களின் நடவடிக்கை இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி உரிமம் பெறாமல் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை, பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை திரியவிட்டால் நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!