பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த வன்முறை..!! 11 பேர் உயிரிழப்பு..!!
அரசின் தடையையும் மீறி, போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் தேர்தல் முறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் கொண்டு வர வலியுறுத்தி ‘ஜாயிண்ட் ஆர்மி ஆக்ஷன் கமிட்டி’ அமைப்பு நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. PoK நிர்வாகம் இந்த அமைப்பை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்திருந்தும், போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை விடாப்பிடியாக முன்வைத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் தொடங்கிய போராட்டங்கள், நேற்று திங்கள்கிழமை வன்முறையாக மாறின. தடைசெய்யப்பட்ட அமைப்பினர் வீதிகளில் பெருமளவில் திரண்டபோது, அவர்களைக் கலைக்க முயன்ற போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 போலீசார் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 காவலர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து PoK போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதாகவும், சில இடங்களில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று செவ்வாய்கிழமை அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாது..!! உரிமை காக்க களமிறங்கிய மதிமுக... சென்னையில் ஆர்ப்பாட்டம்..!
மேலும், இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதால், தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாயிண்ட் ஆர்மி ஆக்ஷன் கமிட்டி, PoK-வில் நடைபெறும் தேர்தல் அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், உள்ளூர் மக்களின் குரலுக்கு மதிப்பளித்தல், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. PoK நிர்வாகம் இந்தப் போராட்டங்களை சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகக் கருதி தடை செய்துள்ளது.
எனினும், உள்ளூர் மக்களிடையே தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள் PoK-வில் ஏற்கெனவே நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், பதற்றம் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: வாக்குறுதி vs நிதர்சனம்... நாகை விவசாயிகள் நூதன போராட்டம்..! கடும் எதிர்ப்பு..!