காக்கிநாடா: யூ-டர்ன் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! பற்றி எரிந்த லாரிகள்..!! ஓட்டுநர் பலி..!!
ஆந்திரா காக்கிநாடாவில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் கதிபுடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 29, 2026) அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தீயில் சிக்கி உயிரிழந்தார். இரு லாரிகளும் மோதியதைத் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
காக்கிநாடா மாவட்டத்தின் கதிபுடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விஜயவாடாவிலிருந்து சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை எதிர்பாராத வகையில் யு-டர்ன் எடுக்க முயன்ற மற்றொரு லாரி மோதியது. இந்த மோதலின் தாக்கத்தில் இரு வாகனங்களும் உடனடியாக தீப்பிடித்தன. எரிபொருள் தீப்பற்றியதால் தீ மிக வேகமாக பரவியது.
கண்டெய்னர் லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் கருகியது. இதில் கண்டெய்னர் லாரியை இயக்கிய கொல்கத்தாவைச் சேர்ந்த கமல் ஷேக் என்ற ஓட்டுநர் கேபினுக்குள் சிக்கிக் கொண்டு தீயில் எரிந்து உயிரிழந்தார். மற்ற லாரி ஓட்டுநர் தீ பரவுவதற்கு முன்பாகவே குதித்து தப்பினார். விபத்து நடந்த உடனேயே அப்பகுதியில் தடித்த புகை எழுந்தது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காஷ்மீர்: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்..!! பறிபோன ராணுவ வீரர்களின் உயிர்..!!
சுற்றியிருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்பு வாகனங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய சேதத்தை அகற்றுவதற்காக கிரேன் உதவியுடன் இரு லாரிகளும் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் சாலை போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
பின்னர் போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது. காக்கிநாடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்தின் உண்மை நிலையை கண்டறிய முயல்கின்றனர். யு-டர்ன் செய்ய முயன்ற லாரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் திடீர் யு-டர்ன் எடுப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். இந்த விபத்து சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கனரக வாகன ஓட்டிகளுக்கு கடுமையான பயிற்சியும், விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதும் அவசியம் என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ஸ்பெயினில் கோர சம்பவம்..!! தடம் புரண்ட ரயில்..!! பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு..!!