×
 

கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். போதைப்பொருள் கலாசாரத்தை முழுமையாக ஒழிப்பதற்கும், இளைஞர், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கமிஷனர் எஸ்.பி.கார்த்திகா, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கை கலால் வரித்துறை துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் வருமாறு: பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகில் போதைப்பொருள், சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை மற்றும் விநியோகம் நடைபெறுகிறதா என தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உதவியுடன் உள்ளூர் ரகசியத் தகவல் வழங்குநர் (இன்பார்மர்) வலையமைப்பை உருவாக்கி, போதை விநியோகக் கட்டமைப்பை முழுமையாகக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டு தீவிர சோதனைகள் நடத்த வேண்டும். உற்பத்தி, கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, டாஸ்மாக், வனத்துறை, ரயில்வே போலீஸ் மற்றும் அண்டை மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கிளப்புகளில் அடிக்கடி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்கள் தடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதிகபட்ச சில்லறை விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது. 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது அல்லது வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பார்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் மதுபான விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மது மற்றும் போதைப்பொருள் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். போதை மறுவாழ்வு திட்டங்களில் சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கமிஷனர் எஸ்.பி.கார்த்திகா வலியுறுத்தியுள்ளார். 

இந்த அறிவுறுத்தல்களை மிகுந்த கவனத்துடன் அமல்படுத்த வேண்டும் என்றும், அலட்சியம் காட்டினால் அல்லது கடமையில் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் முதலமைச்சரின் தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: என் பொண்டாட்டி வீடியோவுக்கு எதுக்கு லைக் போட்ட?! இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வினை! வாலிபர் மீது தாக்குதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share