பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!
மின்வாரிய அதிகாரிகளின் செல்போன்களுக்கு உள்வரும் அழைப்புகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் கட்டணத்தை அரசு செலுத்தாததால், பெரும்பாலான அதிகாரிகளின் செல்போன்களில் உள்வரும் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செல்போன் இணைப்புகளுக்கான கட்டணத்தை அரசு செலுத்தாததால், அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்குக்கு இணைப்புகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், தற்போதைய இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!
அவர்கள் செல்போன் கட்டணத்தைச் செலுத்தவில்லை. ஏன் கட்டவில்லை என்றால், தற்போது பயன்படுத்தி வரும் சிம் எண்ணை வேறு நெட்வொர்க்குக்கு, குறிப்பாக ஜியோ நெட்வொர்க்குக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நெட்வொர்க் நிறுவனத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதால், தற்போதைய இணைப்புகளுக்கான கட்டணத்தை அரசு செலுத்தாமல் உள்ளது.
வேறு நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்ற அரசின் முடிவின் காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நானே ஒரு மின்வாரிய ஊழியர். மேலும், மாநில துணைப் பொதுச்செயலாளராகவும் இருக்கிறேன். நானே தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக மட்டுமல்லாமல், சுமார் பத்து நாட்களாகவே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களில் சிலரால் நேரடியாக மின்வாரிய அலுவலகங்களுக்கு வர முடியாது. வயதானவர்கள் இருக்கலாம், வெளியூரில் இருப்பவர்கள் இருக்கலாம், வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் இருக்கலாம். அவர்கள் தொலைபேசி மூலமாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தங்களுடைய பிரச்சினைகளைத் தெரிவிப்பார்கள்.
ஆனால், தற்போது தொலைபேசி மூலமாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர் என யாரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீரென எகிறிய மின்கட்டணம்! மின்வாரியமே ஒப்புக்கொண்ட குளறுபடி! தமிழகம் முழுவதும் களஆய்வுக்கு உத்தரவு!