தலைநகர் டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பரிதாப பலி..!!
டெல்லியில் பெய்த கனமழையால் குப்பை வியாபாரிகள் தங்கியிருந்த குடிசை சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் இன்று பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிண்டோ பாலம், பிரகதி மைதானம், கனாட் பிளேஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனாட் பிளேஸில் இரண்டு மணி நேரத்தில் 100.2 மி.மீ மழை பதிவாகியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கனமழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன, மின்சார விநியோகம் தடைப்பட்டது மற்றும் சாலைகளில் வாகனங்கள் நீரில் மூழ்கின. சஃபதர்ஜங் மருத்துவமனையில் கூட கால் ஆழம் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நொய்டா, காஜியாபாத், குர்கான் மற்றும் பரிதாபாத் பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மழைநீர் வடிகால் அமைப்புகளை சரிசெய்யவும், தேங்கிய நீரை அகற்றவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தொடர்ந்து பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல சமூக ஊடகப் பதிவுகளில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும், பலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இந்த டிரஸுக்கு என்ன குறைச்சல்.. சுடிதாருக்கு நோ அட்மிஷன்.. சர்ச்சையில் சிக்கிய டெல்லி ஹோட்டல்!!
இந்நிலையில் டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஜைத்பூர், ஹரி நகர் பகுதியில் இன்று பெய்த கனமழை காரணமாக ஓர் பழைய கோயிலுக்கு அருகிலுள்ள குடிசை சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் குப்பை வியாபாரிகளாக இருந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் முட்டு அலி (45), ரபிபுல் (30), ஷபிபுல் (30), ருபினா (25), டோலி (25), ஹஷிபுல், ருக்ஸானா (6), மற்றும் ஹசினா (7) என அடையாளம் காணப்பட்டனர்.
கனமழையால் சுவரின் கட்டமைப்பு பலவீனமடைந்து, மேற்கூரையின் எடையை தாங்க முடியாமல் சுவர் இடிந்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவம் நிகழ்ந்தவுடன், அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளுக்கு உதவினர். ஆனால், மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, அப்பகுதியிலுள்ள குடிசைகள் அகற்றப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வானிலை மையம், அடுத்த சில நாட்களுக்கு மிதமான முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த கனமழை, பருவமழையின் தாக்கத்தால் ஏற்பட்ட வளிமண்டல மாற்றங்களால் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி.. பங்களாதேஷி 5 பேர் கைது..!!