என்ன ஆதாரம் இருக்கு..? இப்படியா பண்ணுவீங்க? ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் கேள்வி..!
எந்த ஆதாரமும் இல்லாமல் வாக்காளர்களை திருடர்கள் என இழிவுபடுத்துவதா என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்காளர் சிறப்பு திருத்தம் என்பது ஏராளமான மக்களின் வாக்குகளை பறிப்பதற்கான நாச வேலை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு திருட்டு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை என்றும் கூறினார். ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட ஐந்து வகையான முறைகேடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல் வாக்காளர்களை திருடர்கள் என இழிவுபடுத்துவதா என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் குறித்து தேர்தல் ஆணையம் இந்த கேள்வியை முன் வைத்துள்ளது. ஒருவர் இரண்டு முறை வாக்களித்ததாக ஆதாரம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறியது.
இதையும் படிங்க: இங்க வாலாட்ட முடியாது.. வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திமுக எதிர்க்கும்! என்.ஆர் இளங்கோ திட்டவட்டம்..!
ஆதாரம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குத் திருட்டு என்பது வாக்காளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல எனவும் தெரிவித்தது. தேர்தல் ஆணைய ஊழியர்களின் கண்ணியத்தையும் இழிவுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே வாக்குத்திருட்டுக்கு எதிரான போராட்டத்தை பீகாரிலிருந்து தொடங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி பீகாரில் பேரணி செல்ல உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் ராகுல் காந்தி. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டம் இது என்றும் ஜனநாயகம் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம் எனவும் கூறினார். இந்த முறை வாக்கு திருடர்களை தோற்கடிப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: எப்படி வாக்கு திருடுறாங்க தெரியுமா? காங்கிரஸ் கட்சி புதிய வீடியோ வெளியீடு...