மேற்கு வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மாற்றம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!
மேற்கு வங்காள தலைமை செயலாளரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், புதுடெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலாளராக (Chief Secretary) பதவி வகித்து வந்த நந்தினி சக்ரவர்த்தி (Nandini Chakraborty) மற்றும் உள்துறை செயலாளர் (Home Secretary) ஜகதீஷ் பிரசாத் மீனா (Jagdish Prasad Meena) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்தினி சக்ரவர்த்திக்கு பதிலாக, 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான துஷ்யந்த் நரியாலா (Dushyant Nariala) புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், உள்துறை செயலாளர் பதவிக்கு சங்கமித்ரா கோஷ் (Sanghamitra Ghosh) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உடனடியாக பொறுப்பேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: காபந்து அரசு..! இனிமே NO..! அதிரடியாக அமலான விதிகள்..!!
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழைய தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோர் தேர்தல் முடிவடையும் வரை எந்தத் தேர்தல் தொடர்பான பதவிகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, தேர்தல் நடைமுறைகளில் நடுநிலை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிகிறது.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறும். மொத்தம் 294 தொகுதிகளுக்கும் இத்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் மாற்றம், தேர்தல் ஆணையத்தின் கடுமையான கண்காணிப்பு மற்றும் மாநில அரசுடன் ஏற்கனவே நிலவி வந்த சில முரண்பாடுகளின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சமீப காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான பிரச்சினைகள், அதிகாரிகள் மாற்றங்கள் போன்றவை தொடர்பாக தேர்தல் ஆணையமும் மாநில அரசும் முன்னர் மோதல்களில் ஈடுபட்டிருந்தன. இந்த நடவடிக்கைகள், வரும் தேர்தலில் நியாயமான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிர்வாக ரீதியான மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!