பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!
இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தில் உள்ளது. இந்தப் போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
போரின் பாதிப்புகள், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு, உலக அமைதி மற்றும் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர். இந்த அதிகாரபூர்வ உரையாடலில் உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்வும் இணைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடலில் ஒரு தனி நபர் பங்கேற்பது அரிதான நிகழ்வு என்பதால், இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், மஸ்க் உரையாடலில் பங்கேற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மஸ்க் என்ன பேசினார் அல்லது அவரது பங்கேற்புக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தரைவழி தாக்குதல் தேவையே படாது!! ஈரானை ஈசியா ஜெயிச்சிருவோம்!! அமெரிக்க அமைச்சர் அசால்ட் பதில்!
மத்திய கிழக்கு நாடுகளில் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால், அவரது பங்கேற்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த உரையாடல் உலகப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை இந்த உரையாடலை “பயனுள்ளது” என்று விவரித்துள்ளது. பிரதமர் மோடி ஏற்கெனவே போர் நிலைமை குறித்து கவலை தெரிவித்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உரையாடலில் மஸ்க்கின் பங்கேற்பு, சர்வதேச அரசியலில் தனியார் தொழிலதிபர்களின் செல்வாக்கு அதிகரிப்பதை பிரதிபலிப்பதாக சிலர் கருதுகின்றனர்.
தற்போது ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், உலக நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி மற்றும் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு, பிராந்திய அமைதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!! 24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!