ஒரே ரீசார்ஜ்.. 200 பயணங்கள் ஃப்ரீயா போகலாம்.. FASTag திட்டம் இன்று முதல் அமல்..!!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3000 பாஸ் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் விதமாக டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடிந்தது.
அதே நேரத்தில் இந்த முறையால் முழுமையான தீர்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் கட்டணத்தை ரொக்கம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..? ஆக.15 முதல் அமல்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இந்நிலையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தனியார் வாகனங்களுக்கு புதிய வருடாந்திர பாஸ்டேக் பாஸ் திட்டம் ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இத்திட்டத்தின் கீழ், வாகன உரிமையாளர்கள் ரூ.3,000 செலுத்தி ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு கட்டணமின்றி பயணிக்கலாம். இது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் தடையற்ற, செலவு குறைந்த பயணத்தை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது.
இத்திட்டம் கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாஸ்டேக் அடிப்படையிலான இந்த பாஸ், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தையும் நெரிசலை குறைக்கவும், வாகன ஓட்டிகளின் செலவை மிச்சப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பாஸை பயன்படுத்த, புதிய பாஸ்டேக் வாங்க வேண்டிய அவசியமில்லை; தற்போதைய பாஸ்டேக் கணக்குடன் இணைக்கப்படும். மோசடி அல்லது விதிமீறல் காரணமாக கருப்பு பட்டியலில் உள்ள வாகனங்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவை. மத்திய அரசின் இந்த முயற்சி, சுங்கச்சாவடி கட்டணங்களை ஒரே ப்ரீபெய்ட் பரிவர்த்தனை மூலம் செலுத்துவதை எளிதாக்குகிறது.
இத்திட்டம் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார நன்மை தருவதுடன், சாலை போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்தும். இருப்பினும், மாநில நெடுஞ்சாலைகளில் இந்த பாஸ் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் கார், வேன், ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை.. புதிய திட்டம் அமல்..!!