×
 

கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தவும், மத்திய-மாநில உறவுகள் குறித்து மீண்டும் ஒரு தேசிய அளவிலான விவாதத்தை தொடங்கவும் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பான கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மறு ஆய்வு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளுக்குக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதோடு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விரிவானக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; அது நமது அரசியலமைப்பின் அடிப்படை அங்கம். கடந்த சில ஆண்டுகளாக நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசிடம் குவிந்து வருவது, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது எனச் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில், அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதிச் சுதந்திரமும் (Fiscal Space) வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

அனைத்து மாநிலங்களும் தங்களுக்குள் விவாதித்து, கூட்டாட்சி கட்டமைப்பில் சமநிலையை மீண்டும் நிலைநாட்ட மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் (Inter-State Council) போன்ற ஒரு வலுவான அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையைத் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்திருந்தார். அதற்கு வலுசேர்க்கும் விதமாகச் சித்தராமையாவின் இந்த ஆதரவு அமைந்துள்ளது.

தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது தேசிய அளவில் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share