×
 

ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சோகம்: விசைப்படகில் கழிவு மீன் தொட்டியில் விஷவாயு தாக்கி மீனவர் உயிரிழப்பு; மேலும் 3 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில்  விசைப்படகில் மீன்களை இறக்கும் பணியின்போது, மீன் சேமிப்பு அறையில்  விஷவாயு தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரனுக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் தமிழகம் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடி முடித்து நேற்று இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பிய அவர்கள், படகிலிருந்து மீன்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல், கழிவு மீன் சேமிப்பு அறைக்குள் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன், அபினேஷ் மற்றும் அருண் ஆகியோர் உள்ளே சென்றனர். அப்போது கதிரவனும் அதில் சென்ற அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக மீது ரங்கசாமி அதிருப்தியா..?? 9 நாட்களாக நீளும் இலாகா இழுபறி!

உடனடியாக அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கதிரவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்துவேல், அபினேஷ் மற்றும் அருண் ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நிரவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விஷவாயு தாக்கத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “இபிஎஸ் அவர்களே... உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?” - எரிமலையாய் வெடித்த சி.வி.சண்முகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share