×
 

ஜார்க்கண்ட் Ex. முதலமைச்சர் சிபு சோரன் மறைவு.. நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி..!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மறைவையொட்டி பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) இன்று காலை 8:56 மணிக்கு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் காலமானார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், எக்ஸ் தளத்தில் உருக்கமாக அறிவித்தார்.

1944ம் ஆண்டு ஜனவரி 11இல் ராம்கர் மாவட்டத்தில் பிறந்த சிபு சோரன், சாந்தால் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். 1970களில் ஆதிவாசி நில உரிமைகளுக்காகப் போராடி, 1973இல் ஜே.எம்.எம் கட்சியை நிறுவினார். இவர் 2000இல் ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றினார். மூன்று முறை ஜார்க்கண்ட் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய இவர், தும்கா தொகுதியிலிருந்து எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிவாசி மற்றும் ஏழை மக்களின் உரிமைகளுக்காக அவரது பங்களிப்பு மறக்க முடியாதது.

இதையும் படிங்க: ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

சிபு சோரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல, ஜார்க்கண்ட் மாநிலச் சட்டசபைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜார்க்கண்ட் அரசு ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் மாநில துக்கம் அறிவித்து, அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிபு சோரனின் உடல் ராஞ்சிக்கு எடுத்து வரப்பட்டு, அவரது சொந்த ஊரான ராம்கரில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபு சோரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அருகில் நின்ற சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், சிபு சோரனை “புலப்படாத தலைவராக” புகழ்ந்து, அவரது பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்தார். மேலும் சிபு சோரன், பழங்குடி சமூகங்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அவரது மறைவு வேதனையளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  

இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்! விடாது நடக்கும் யுத்தம்! ஜார்கண்ட், சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட் கதை முடிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share