×
 

ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

வரும் ஜூன் 15ம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்று முதல்வர் சதீசன் அறிவித்தார்.

கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இன்று காலை மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நான்கு பிரமுகர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

பதவியேற்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களும் விழாவைச் சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சி கேரள காங்கிரஸ் வரலாற்றில் முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

பதவியேற்புக்குப் பின்னர், முதலமைச்சர் சதீசன் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான கோப்புகளில் முதல்வர் சதீசன் கையெழுத்திட்டார். 

இதையும் படிங்க: கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சதீசன், தனது அரசின் முன்னுரிமைத் திட்டங்களை அறிவித்தார். “தேர்தலின்போது மக்களுக்கு ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். அதில் முதன்மையானது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம். வரும் ஜூன் 15-ம் தேதி முதல் கேரள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்” என்று அவர் தெரிவித்தார். மேலும், முதியோர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்திய அளவில் முதன்முறையாக தனி முதியோர் நலத் துறை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். 

கடந்த ஆட்சியில் நிலுவையில் இருந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, ஆஷா பணியாளர்களின் மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்வு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளி சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அரசியல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், மே 21-ம் தேதி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். மே 22-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும் முதல்வர் தெரிவித்தார். UDF அரசு பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. கேரள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கேரளாவில் காங். காட்டிய கிரீன் சிக்னல்... ஆட்சி அமைக்க உரிமைக்கோரிய வி.டி. சதீஷன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share