எரிபொருள் தட்டுப்பாடு! மொபைல் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்!! இ - காமர்ஸ் சேவை அம்போ!
மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் வங்கதேசத்தில் 'மொபைல் போன் நெட்வொர்க்' பெருமளவில் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம், அண்டை நாடான வங்கதேசத்தில் (Bangladesh) மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அந்நாட்டில் மொபைல் போன் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வங்கதேசம் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் சுமார் 95 சதவீதத்தை மேற்காசிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரினை (Strait of Hormuz) பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் கிடைப்பதில் சிக்கல் உருவாகி, பொதுமக்கள் தினசரி வாழ்க்கையிலும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நாட்டில் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டதால் மின்வெட்டுகள் அதிகரித்துள்ளன. மொபைல் டவர்களை தொடர்ந்து செயல்படுத்த, தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் எரிபொருள் தேவைப்படுகின்றது. ஆனால், தற்போதைய பற்றாக்குறை காரணமாக, பல பகுதிகளில் டவர்களை இயங்கச் செய்வது சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!
இதன் விளைவாக, மொபைல் அழைப்புகள் தடைபடுதல், இணைய வேகம் குறைதல், சில இடங்களில் முழுமையான நெட்வொர்க் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டால், அவசர சேவைகளுக்கும் இது பெரிய சவாலாக மாறும்.
மேலும், இந்த நிலை நீடித்தால், வங்கதேசத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மொபைல் பணப் பரிவர்த்தனை, இ-காமர்ஸ் சேவைகள், ஆன்லைன் வணிகம் போன்றவை பெரும்பாலும் தொலைத்தொடர்பு சேவைகளையே சார்ந்துள்ளன. அவை தடம் புரண்டால், சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பலருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இந்த பிரச்சினை விரைவில் சரியாகாவிட்டால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய பின்னடைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. மேற்காசியாவில் நிலவும் பதற்றம், இதுபோன்ற அலை விளைவுகளை ஏற்படுத்தி வருவது சர்வதேச அளவில் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை நிறுத்த வாய்ப்பு!! கோவை தெற்கில் பணப்பட்டுவாடா புகார்!!