×
 

எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையில் சுமார் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே உள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவும் ஈரானும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட போட்டியிடுவதால், சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் 20 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் வர்த்தகம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த நெருக்கடியின் நேரடி தாக்கம் விமானப் போக்குவரத்துத் துறையில் தெரியத் தொடங்கியுள்ளது. விமான எரிபொருள் (Jet Fuel) விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. 

இதனைச் சமாளிக்க மத்திய அரசு சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை தற்காலிக நிவாரணம் என்றாலும், நீண்டகால தீர்வு இல்லாத நிலையில் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது செயல்பாடுகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு புது ஆஃபர்..!! வாரி வழங்கும் மத்திய அரசு..!! குறைகிறதா விமான டிக்கெட் விலை..??

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனது மொத்த விமான சேவைகளில் சுமார் 10 சதவீதத்தை குறைக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வழித்தடங்களில் அதிக எரிபொருள் நுகர்வு இருப்பதால், நிறுவனம் முதலில் இவற்றை குறைக்க முடிவு செய்துள்ளது. பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் நிலையில், மாற்று ஏற்பாடுகள் அல்லது பணம் திருப்பித் தரும் வசதிகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து நிபுணர்கள், இந்த நெருக்கடி நீடித்தால் பல விமான நிறுவனங்கள் ஊழியர் குறைப்பு, கட்டண உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தள்ளப்படலாம் என எச்சரிக்கின்றனர். 

மத்திய அரசு இந்தத் துறைக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என விமானத் துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எண்ணெய் விலை ஸ்திரத்தன்மை அடையும் வரை விமானப் பயணங்கள் விலை உயர்வு மற்றும் சேவை குறைப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை சர்வதேச வர்த்தகம், சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து மாற்று எரிபொருள் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share