பூதாகரமாகும் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை..!! பெங்களூருவில் ஒரே நாளில் 25% ஓட்டல்கள் மூடல்..!!
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் 25 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் நிலைமை உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இராணுவ இலக்குகள், அணு திட்டங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை குறிவைத்தவை என அறிவிக்கப்பட்டது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமனெய் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களால் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேல், அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மோதல் தீவிரமடைந்து வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து ஈரானால் தடை செய்யப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகவே செல்வதால், இந்தத் தடை உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக உணரப்படுகிறது.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசின் விரைவான நடவடிக்கை தேவை..!! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..!!
குறிப்பாக இயற்கை எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உணவகங்கள், ஓட்டல்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் இந்தப் பிரச்சினை தீவிரமாக உள்ளது.
நான்கு நாட்களாக தொடர்ந்து கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரே நாளில் 25 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாகவும், இதுவரை சுமார் 65 சதவீத ஓட்டல்கள் இயங்காமல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, மங்களூரு, பெலகாவி, விஜயபுரா, உடுப்பி, ஹாசன், துமகூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து வந்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உணவு கிடைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சில ஓட்டல்கள் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால், கியாஸ் விநியோகம் விரைவில் சீராகாவிட்டால் மீதமுள்ள ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் பி.சி. ராவ் இதுகுறித்து கூறுகையில், "வணிக சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பில் உள்ள சில சிலிண்டர்களைப் பயன்படுத்தி குறைந்த அளவு உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஆனால், இந்தத் தட்டுப்பாடு காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த நெருக்கடியால் மக்கள் கடும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் எரிபொருள் விநியோகம் சீராக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தப் போர் நீடித்தால் பொருளாதார விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும் என அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: பெங்களூரில் கேஸ் தட்டுப்பாடு..!! தவிக்கும் PG-கள்..!! ஒரு வாரம் தான் சமாளிக்க முடியுமாம்..!!