×
 

பயம் வேண்டாம்.. எரிவாயு விநியோகம் சீராக உள்ளது..!! வயிற்றில் பாலை வார்த்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்..!!

எரிவாயு விநியோகம் போதுமான அளவில் உள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தினசரி சுமார் 28 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர்களுக்கு முழு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், போர் பதற்றம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் விநியோகம் தொடர்ந்து சீராகவே நடைபெற்று வருவதாகவும் IOC தெரிவித்துள்ளது.

மேலும், 87 சதவீத சிலிண்டர் முன்பதிவுகள் இப்போது முழுமையாக எண்ம (டிஜிட்டல்) முறையில் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் நேரில் வந்து முன்பதிவு செய்வதைத் தவிர்த்து, கைப்பேசி அழைப்பு மூலமான ஐவிஆர்எஸ் (IVRS) முறை மற்றும் குறுஞ்செய்தி (SMS) வசதிகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களை ஊக்குவித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

சரியான நபர்களுக்கே சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுவதாகவும், விநியோகம் போதுமான அளவில் உள்ளதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் IOC அறிவித்துள்ளது. எனினும், சில விநியோகஸ்தர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புகார்கள் வருவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 

இதையும் படிங்க: அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!

சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க விநியோக நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் அச்சத்தில் சிலிண்டர்களை அவசரமாக முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும், இயல்பான முறையில் தேவைக்கேற்ப மட்டும் முன்பதிவு செய்யுமாறும் IOC பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

போர் பதற்றம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 48,000-க்கும் அதிகமான சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 141 விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 விநியோக நிறுவனங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், பொதுமக்கள் அமைதியுடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு ஆதரவு..!! தமிழகத்தில் பரப்புரைக்கு வரும் 6 மாநில முதல்வர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share